பள்ளி மாணவர்களின் சுமைகள், குறிப்பாக அவர்கள் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இதைத் தடுக்க பாடத் திட்டங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில் அமலாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள திட்டங்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் (NCERT), மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (CBSE), மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி அமைப்புகளின் தேவைகளையும் நிறைவு செய்யும் என்று மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் முகமது அலி அஷ்ரஃப் ஃபாத்மி மக்களவையில் இன்று தெரிவித்தார்.
துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என எல்லா மட்டங்களிலும் மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காகப் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஃபாத்மி, இன்னும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
பள்ளி மாணவர்களிடம் உள்ள எல்லாத் திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு, நடனம், இசை உள்ளிட்ட எல்லா அம்சங்களும் அடங்கிய பாடத் திட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக மக்களவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தீப் தீக்ஷித், பிரியா தத் ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதற்கு தேர்வுச் சுமையே காரணம் என்று கூறியிருந்தனர். இதை ஒட்டுமொத்த அவையும் ஆமோதித்தது.
எதிர்காலத்தில் பள்ளிப் பாடத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் போது, மக்களவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஃபாத்மி உறுதியளித்தார்.
அதே நேரத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பங்கு வகிக்கும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மத்திய அரசிற்கு அவசியம் என்றார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களால் மாணவர்களுக்கு வற்புறுத்தல் தரப்படாமல் தடுக்கவும், வீட்டில் நிலவும் சூழலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றார் அமைச்சர் ஃபாத்மி.