சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் பாகிஸ்தான் கருணையுடன் நடந்து கொள்ளும் என்று நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது பற்றி, இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், இந்த வழக்கில் இந்தியாவிற்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளே உள்ளது. அதனால் பாகிஸ்தான் அரசிடம் இரக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும் என்றார்.
மேலும், ஏற்கனவே மக்களின் கருத்துக்களை எடுத்துக் கூறி இரக்கத்துடன் நடந்து கொண்டு அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தூக்கு தண்டனையை விலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கருணையுடன் நடந்து கொள்ளும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்வீர் கவுர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கூறினார்.
கடந்த 17 வருடங்களாக லாகூரில் உள்ள லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏப்ரல் 1ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத்ஜிப் சிங்கின் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருணை மனுவை பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நிராகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.
சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சி ஆகியவை கோரிக்கை வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.