இந்தியரான சரத்ஜிப் சிங்கின் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருணை மனுவை பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நிராகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.
சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சி ஆகியவை கோரிக்கை வைத்தன.
மாநிலங்களவை இன்று கூடியதும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரஷித் அல்வி, 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 4 குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்கை ஏப்ரல் 1ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப் போவதாக வெளியாகி உள்ள செய்தி தொடர்பான பிரச்சனையை எழுப்பினார்.
அப்போது பேசிய ரஷித் அல்வி, சரத்ஜிப் சிங்கின் தூக்கிற்கு எதிராகவும் அவரை விடுதலை செய்யக்கோரியும் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். அவருடன் இணைந்து பா.ஜனதா உறுப்பினர் முக்தர் அப்பாஸ் நக்வி, சரத்ஜிப் சிங்கின் இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரசின் செயல்படாத நிலையை கூறி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, உறுப்பினர்களின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், "இந்த விவகாரத்தை நாம் அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம், இதுபற்றி நாம் அனைவரும் கவலையடைந்துள்ளோம், இது தொடர்பாக அரசு தனது நிலையை விளக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக" கூறினார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்யவும், அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் தடுக்கவும், பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.