திபெத் வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன!
மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எழுந்த பா.ஜ.க. துணைத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, "திபெத் தலைநகர் லாசாவில் கடந்த ஒருவாரமாக சீனப் படையினர் மேற்கொண்டு வரும் இன ஒடுக்கல் நடவடிக்கைகளில், 100 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மக்களவையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன் பேசுகையில், "திபெத்திற்கு தன்னாட்சி வழங்க சீனா தவறி விட்டது. சீனாவின் இன ஒடுக்கல் நடவடிக்கைகள் தொடருமானால், இவ்விவகாரத்தை ஐ.நா. விடம் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் இதையே வலியுறுத்தினர். இதையடுத்து, மத்திய அரசைக் கண்டித்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பிரணாப் முகர்ஜி பதில்!
முன்னதாக, பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சீனா குறித்த இந்தியாவின் கொள்கைகளை மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
திபெத் வன்முறை குறித்து அயலுறவு அமைச்சகம் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "லாசாவில் நடந்துவரும் வன்முறைகள், பதற்ற நிலை குறித்தும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் வந்த தகவல்களால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத் பிரச்சனையை அகிம்சை வழியில், பேச்சின் மூலம் தீர்க்க அதில் தொடர்புடைய அனைவரும் முயற்சிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்ததை மீண்டும் நினைவூட்டினார் பிரணாப் முகர்ஜி.