அணுசக்தி ஒப்பந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இடதுசாரி-ஐ.மு.கூ. உயர்மட்டக் குழு இன்று கூடுகிறது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பா.ஜனதா மட்டுமின்றி இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அரசியல் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
15 உறுப்பினர் கொண்ட இந்த குழுவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு பல முறை கூடி விவாதித்து, ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மே மாதத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. இதற்கிடையில், அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று இடதுசாரி கட்சிகள் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அரசியல் உயர்மட்ட குழு டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேசி இறுதி செய்யப்பட்டுள்ள தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவு நகலை இடதுசாரி கட்சி தலைவர்களிடம் மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.
கூட்டம் குறித்து மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு காணப்படும் என்று நம்புவதாக'' கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் தவறானது என்று உயர்மட்ட குழு கருதினால், மறு நிமிடமே அந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
அக்கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் கூறுகையில், "மத்திய அரசு, தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்யும். அவ்வாறு இல்லாமல் இடையிலேயே கவிழ்ந்து போனால் அதற்கு இடதுசாரிகள் பொறுப்பாக மாட்டார்கள்.'' என்றார்.