பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்ட பின்னர், அவருக்கு கொலை மிரட்டல் வருவது அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கும் அடிக்கடி தகவல் கிடைத்து வருகிறது.
சமீபத்தில், இதுகுறித்து புலனாய்வுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அத்வானியின் ரத யாத்திரை திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குறைக்கப்பட்டது. அவரது பாதுகாப்பும் பலப்படுத்தபட்டது.
இந்நிலையில் ௦௦௦௦௦௦௦௦௦வடமாநிலங்களில் அடுத்தவாரம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அத்வானியின் உயிருக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்திரிகை நிருபர், கட்சி தொண்டர் அல்லது மனு கொடுப்பவர் போன்று வேடமணிந்து வந்து அத்வானியை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அத்வானியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லி பழைய ரயில் நிலையம் மற்றும் உத்திரபிரதேசம் ஹபூர் ரயில் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப்போவதாகவும் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.