சீன அரசிற்கு எதிராக திபெத்தில் நடந்துவரும் மோதல்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரதமர் இன்று டெல்லியில் இல்லாத காரணத்தால் இதுகுறித்து விவாதிக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "சீன எதிர்ப்பு திபெத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்த விரிவான அறிக்கை இரண்டொரு நாட்களில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.
திபெத் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகளுக்கும் சீன ராணுவத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. புத்த பிட்சுகளுடன் இணைந்து பொதுமக்களும் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
சீனா தொடர்புடைய கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.