பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் பெருவாரியான வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும் இரண்டு பெரிய அரசியல் சக்திகளாக வளர்ந்துள்ள நிலையில் இந்தியாவின் நிலைபாட்டில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் அந்தோணி இவ்வாறு பதிலளித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் முன்னேற்றம் குறித்துக் கேட்டதற்கு, வருகிற திங்களன்று நடக்கவுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகுதான் கருத்துத் தெரிவிக்க முடியும் என்றார்.
முன்னதாக நாசிக்கில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வளாகத்திற்குச் சென்ற அமைச்சர் அந்தோணி, அங்கு எஸ்.யு.-30 விமானங்களைப் பார்வையிட்டார். அவருடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் தலைவர் அசோக் பவேஜா இருந்தார்.