இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இடதுசாரிகளுடன் உள்ள கருத்து முரண்பாடு தீர்க்கப்படும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பிரணாப் முகர்ஜி இன்று சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில் இடதுசாரிகளுடன் தான் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சின் விவரங்களை மத்திய அரசு தெரிவிப்பதுடன், அந்த ஒப்பந்தத்தின் வரைவையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.