''கடந்த 2007-ம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் தொலைபேசி வசதி 2 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது'' என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் பி.டி.சி. இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கம்பியில்லா தொழில்நுட்பம், சேவையில் நவீன போக்கு குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கிராமப்புற தொலைபேசி வசதி இலக்கு 25 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மற்றும் தொழிற்சாலையின் கூட்டு முயற்சி அவசியமாகும். இந்த வகையில் கிராமப்பகுதிகளில் தொலைபேசி கோபுரங்கள் அமைப்பது, உள்கட்டமைப்பை பகிர்ந்து கொள்வது ஆகியவை ஒருசில நடவடிக்கைகளாகும்.
வளரும் நாடுகளில் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. அகண்ட அலைவரிசை இணைப்புகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். தற்போது மூன்று மில்லியன் அகண்ட அலைவரிசை இணைப்புகள் மட்டுமே உள்ளன. இது மிகக் குறைவாகும். சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அகண்ட அலைவரிசை இணைப்புகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியம்.
சமீப காலமாக நவீன தொழில்நுட்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்பு கிடைத்த முக்கியமான வலைத் தொடர்பு, நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகங்களுக்கு பரவியது. பின்னர் கிராமப்புறங்களுக்கு பரவியது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு கம்பியில்லா தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம் என்று ராசா கூறினார்.