நமது நாட்டில் உள்ள விவசாயிகள் படும் துன்பங்களுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றி உள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி இவ்வாறு கூறினார்.
"பிரதமர் மன்மோகன் சிங் முன்பு கூறியதைப் போல, கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் துன்பப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம்.
விவசாயிகளுக்கு உதவியதாகக் கூறிக்கொள்ளும் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விவசாயிகளின் எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்குப் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பும் அத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புதான். இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்" என்றார் சோனியா.