இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற முயன்று மத்திய அரசு கவிழும் நிலை ஏற்பட்டால் அதற்கு இடதுசாரிகள் பொறுப்பல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
குறைந்தபட்சப் பொதுச் செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு இடதுசாரிகள் ஆதரவளித்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட காரத், அதிலிருந்து மத்திய அரசு நழுவுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார்.
அவுட்லுக் இதழிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவை ஐ.மு.கூ.- இடதுசாரி உயர்மட்டக் குழுவில் சமர்ப்பிப்போம் என்று உறுதியளித்துள்ளதன் அடிப்படையில்தான், சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்துவதற்கு மத்திய அரசை அனுமதித்தோம்.
அரசு விட்டுக்கொடுத்துச் செல்கிறது. நாங்களும் விட்டுக்கொடுத்துச் செல்கிறோம். ஆனால் எங்களின் அடிப்படை நிலைப்பாடு மாறவில்லை. தற்போதுள்ள நிலையில் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.