நந்திகிராம் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை விடுத்து, ஈராக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் ஆகியவற்றின் மீது அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் ஆண்டறிக்கையில் நந்திகிராம் பற்றிக் கூறப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையற்றதுடன், தேவையற்றையும் ஆகும். பொய்களை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஈராக்கில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம், காசா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்கள் போன்றவற்றில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்” என்று அதில் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பற்றிச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது சலீம், “அமெரிக்காவின் தலையீட்டையும் அதன் அறிக்கையையும் சரியாகச் சிந்திக்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”என்றார்.
“அமெரிக்கா ஒன்றும் மனித உரிமைகளின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரர் இல்லை. சிலர் அப்படி நினைக்கலாம். ஆனால் நாங்கள் அதுபோன்ற மாயைகளில் சிக்குவதில்லை” என்றும் அவர் கூறினார்.