விவசாயக் கடன்கள் தள்ளுபடி விடயத்தில் அனைத்து முடிவுகளும் இணைந்தே எடுக்கப்பட்டன என்றும், இதில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை என்றும் வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார்.
மாநிலங்களவையில் இன்று பட்ஜெட் அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி சிவ சேனா உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பவார், “விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வது தொடர்பாக பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருடன் எங்களுக்கு வேறுபட்ட கருத்து எதுவும் இல்லை. பட்ஜெட் உள்பட எல்லா முடிவுகளும் இணைந்தே எடுக்கப்பட்டன” என்றார்.
ரயில்வே பட்ஜெட் போல விவசாயத்திற்குத் தனி பட்ஜெட் கொண்டுவர முடியாது என்ற பவார், அதுபற்றி மத்திய அரசிடம் எந்த ஆலோசனையும் இல்லை என்றார்.
“நிதி, ஊரக வளர்ச்சி, நீர்ப்பாசனம், நீர்வளம், எரிசக்தி போன்ற அமைச்சகங்களுடன் வேளாண் அமைச்சகம் இணைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவது சாத்தியமில்லை. இதனால், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது” என்றார்.