மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
“மேற்குவங்க அரசு தனது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைவதற்குக் காரணமாகி விட்டதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை கூறுவது கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் என்ன நடந்தாலும் அது மாநில அரசு, மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தைச் சார்ந்ததே அன்றி அமெரிக்காவிற்கு அது தேவையில்லை. இதனால் என்னுடன் சேர்ந்து அனைவரும் அமெரிக்காவைக் கண்டிக்க வேண்டும்” என்றார் அவர்.
இதை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல நாம் என்றார்.