இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாட்டை ஏற்படுத்த சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய அணுசக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவின் தயாரிப்பைப் பற்றிக் கேட்டதற்கு, "சர்வதேச அணுசக்தி முகமையுடன் நாங்கள் நடத்தி வரும் பேச்சுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்" என்றார் ககோட்கர்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ககோட்கர், தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவை இந்தியாவும் சர்வதேச அணுசக்தி முகையும் இறுதி செய்து விட்டனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டதற்கு, "இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழு வருகிற 17 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ககோட்கர் கூறியுள்ள தகவல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.