மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்த பி.டி.ஐ. நிறுவனத்திடம் பேசிய சி.ஐ.டி.யு. தலைவர் சியாமல் சக்கரவர்த்தி, "அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. வுடன் இணைந்த விமான நிலையங்கள் ஆணைய ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கூடுதல் இயக்குநர் எம்.கால், இன்று நள்ளிரவு முதல் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றார்.
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து பழைய விமான நிலையங்களை மூடக் கூடாது என்று வலியுறுத்தி விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் படேல், பழைய விமான நிலையங்கள் மூடப்பட மாட்டாது என்றும், அவற்றில் பணியாற்றி ஊழியர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்கும் என்று உறுதியளித்தார்.