விதர்பா போன்ற வறண்ட நிலப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் இன்று பொது பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, "வங்கிகளில் 2007 மார்ச் 31 ஆம் தேதி வரை விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கால வரையறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றக் கூடாது. வறண்ட நில விவசாயிகளும் பயன்பெறும் வகையில், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு கால வரையறையை மாற்ற வேண்டும்" என்றார்.
விதர்பா போன்ற வறண்ட பகுதிகளில் அறுவடை காலத்தைப் பொறுத்தும், அவர்கள் வாங்கியுள்ள கடன் தொகையைப் பொறுத்தும் தள்ளுபடிக்கான கால வரையறையை நீடிக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு விவசாயிக்கும் திட்டத்தின் பலன் போய் சேருவதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.
2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே கடன் தள்ளுபடித் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ளவர்கள் என்பதைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "பாசன வசதியில்லாத வறண்ட நிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் ஏராளமான நிலம் இருக்கும். ஆனால் அவர்களால் இரண்டு ஹெக்டேர் கூட விவசாயம் செய்ய முடியாது. இதனால் அவர்களுக்கு இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்" என்றார்.
விதர்பா போன்ற பகுதிகளில் நிலத்தின் அளவை விட அதன் உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடி வழங்குவதுதான் சரியானதாக இருக்கும் என்றார் அவர்.
பட்ஜெட் மீது ராகுல் காந்தி நிகழ்த்திய 10 நிமிட விவாத உரையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர்கள் ரசித்துப் பாராட்டினர்.