இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனென் சென் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் இது குறித்துப் பேசுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் எந்தத் திட்டமானாலும் அனைவரின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடனான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம், அணு எரிபொருள் வழங்கு நாடுகளுடனான பேச்சுக்கள் ஆகியவற்றை விரைவில் மேற்கொள்வதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ரோனென் சென், அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் முடிவுறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழு வருகிற 17 ஆம் தேதி கூடி, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு நடத்தியுள்ள பேச்சு குறித்து விவாதிக்கவுள்ள நிலையில் ரோனென் சென்னின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.