காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தொடர்புடைய 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், வழக்கின் தற்போதை நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் ஒரு வாரத்திற்குள் ம.பு.க. தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்குத் தொடர்புள்ளது என்பதற்கு ஆதாரமில்லை என்றும், சாட்சிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறி வழக்கைக் கைவிட ம.பு.க. முடிவு செய்தது.
ஆனால், இவ்வழக்கின் முக்கியமான சாட்சி ஒருவர் அமெரிக்காவில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு ம.பு.க.விற்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டது.
ஜனவரி மாதத்திற்குள் வழக்கின் தற்போதைய நிலை பற்றிய அறிக்கையை ம.பு.க. நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதன்படி ஜனவரி மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் அவகாசம் வேண்டும் என்று ம.பு.க. கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.