இந்தியா- பாகிஸ்தான் அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுக்கள் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வைத் தராது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஸ்ரீநகர் வந்த அமைச்சர் சைஃபுதீன் சோஸிடம் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், "அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுக்கள் இறுதியானது அல்ல. அரசியல்வாதிகள் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும். பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பேச்சுக்களைத் துவக்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பேச்சுத்தான் ஒரே வழி என்பதிலும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக உள்ளார். பாகிஸ்தானில் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அங்கு புதிய அரசு அமைந்த பிறகு அதனுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம்.
காஷ்மீரில் இயங்கும் பிரிவினைவாதக் குழுக்களுடன் பேச்சு நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைவரும் பிரதமருடன் பேசலாம்" என்றார்.