புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முகுத் மிதி பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த முகுத் மிதி நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும் அனுப்பி வைத்தார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் பிரதீபா அவருக்கு பதிலாக அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் பூபிந்தர் சிங்கை முறையான ஏற்பாடுகள் செய்யும் வரை கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமித்துள்ளதாக குடியரசுத்தலைவர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முகுத் மிதி தனது சொந்த மாநிலமான அருணாச்சல் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிட உள்ளதால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15ஆம் தேதி ஆகும். 17ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு 19ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.