Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் இல்லை!

சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் இல்லை!
, புதன், 12 மார்ச் 2008 (19:05 IST)
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய அரசுக்கு உத்தேசம் இல்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கேள்விக்கு பதிலளிக்கையில், சிறப்பு பொருளாதார சட்டம், நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். இந்த கொள்கை திறம்படவும். சுமுகமாகவும் செயல்படுகிறது. இந்த சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும் செய்யப்படமாட்டாது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி குறைவதால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இப்போதே கூறமுடியாது.

2006-07 நிதி ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ரூ.34,615 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சென்ற நிதி ஆண்டில் (2005-06) ரூ.22 ஆயிரத்து 840 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து, இந்த நிதி ஆண்டில் டிசம்பர் இறுதி வரை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு பொருளாதார மண்டலம் சட்டத்தின் படி 439 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முதல்நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதில் 202 உறுதிப்படுத்தப்பட்டு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 201 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்த 439 பொருளாதார மண்டலங்களும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படுகிறது. இவை மொத்தம் 60 ஆயிரத்து 168 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது.

கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் உள்ளன. எல்லா சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலமாக 2 லட்சத்து 80 ஆயிரத்து 478 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளன.

கர்நாடாகா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 19,178 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 14 ஆயிரத்து 827 பேருக்கும், ஆந்திராவில் 13,785 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளன என்று கூறினார்.

இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் து.ராஜா, பெனுமல்லி மது ஆகியோர், எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி குறைவது, நாட்டில் அமைக்கப்படும் பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பயன்படுமா, இதன் கொள்கை மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசும் போது கமல்நாத் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் கமல்நாத்தின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மாநிலங்களவை உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபையில் அமளி நிலவியது. இடது சாரி கட்சி உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சி,சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து, இது பற்றி சபையில் முழு அளவில் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த து.ராஜா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த கொள்கை மீறப்படுகிறது, இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் துறையினரால் விதிகளுக்கு மாறாக பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி, உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இதன் விதி முறைகள் மீறப்பட்டுள்ள விபரங்களை அடுத்த 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் அமைச்சரிடம் தெரிவிக்குமாறு கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil