தேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பயங்கரவாதம், ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தில் போன்ற குற்றங்களைத் தேசக் குற்றங்களாகக் கொண்டு, அவைகளை நேரடியாக விசாரிக்கும் அதிகாரத்தை மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு, ம.பு.க. செயல்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக அளித்த பரிந்துரைகள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன், பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஒன்றை மத்திய புலனாய்வுக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும், மத்திய உளவுப் பிரிவுகள் அளிக்கும் தகவல்களின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் அதற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார்.
புலனாய்வு அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தைச்(யு.பி.எஸ்.சி.) சார்ந்திராமல், பல்வேறு மட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்பும் அதிகாரத்தை ம.பு.க.விற்கு வழங்க வேண்டும் என்றும், சில பணிகளுக்கு பிற துறைகளின் அதிகாரிகளைச் சார்ந்திருக்கும் போக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
”ஆள் கடத்தல், கள்ளச் சந்தை, போதைப் பொருள் கடத்தல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன என்பதால் அவற்றை தேசக் குற்றங்களாகக் (Federal Crimes) கருத வேண்டும். இப்படிப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்த நிலையிலேயே அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ம.பு.க.விற்கு வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றவை தொடர்பான வழக்குகள் ம.பு.க.விடம் ஒப்படைக்கப்படுவதற்குள் நேர விரையம் ஏற்படுவதுடன், தடயங்கள் இழப்பும் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் குற்றவாளிகள் தப்புவதற்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக ம.பு.க.விற்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்” என்று நாச்சியப்பன் கூறினார்.
டெல்லி சிறப்புக் காவல்துறைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், அதன் கட்டுப்பாட்டில் இருந்து ம.பு.க.வை விடுவிப்பதுடன், 'மத்தியப் புலனாய்வுக் கழகம் மற்றும் விசாரணைச் சட்ட முன்வரைவை' அறிமுகம் செய்து, அதனை நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.க்கு நிகரான அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் என்று நாச்சியப்பன் தெரிவித்தார்.