மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா- பங்களாதேஷ் தலைநகர் டாக்கா இடையே புதிய பயணிகள் இரயில் இயக்கப்படும் என்று மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.
இந்த இரயில் போக்குவரத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், மக்களுக்கிடயேயான தொடர்பை அதிகரிக்க உதவும் வகையில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று 2008-09ம் ஆண்டுக்கான இரயில்வே வரவு-செலவு திட்டம் தொடர்பான பொது விவாதத்தின் போது, 'மைத்ரி' விரைவு வண்டி என்று அழைக்கப்படும் இந்த இரயில் போக்குவரத்து இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் வகையில் புதிய இரயில் வழித்தடம் அமைப்பதற்காக அரசு ஆலோசித்து வருவதாகவும், இந்த திட்டத்திற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.