''பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும்'' என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று உறுப்பினர் அசாவுதின் ஓவாசி எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பதில் அளிக்கையில், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு இரண்டு திட்டங்கள் மூலம் சுகாதார காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் ஒட்டுமொத்த நலத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக சுகாதார காப்புறுதி திட்டம், கைவினை கலைஞர்களுக்காக ராஜிவ் காந்தி சில்பி ஸ்வஸ்த்யா திட்டம் ஆகிய இரு திட்டங்களின் மூலம் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும்.
புற்று நோய், பக்கவாதம், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய், காசநோய், வலிப்பு ஆகிய நோய்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார திட்டத்தின் கீழ் காப்புறுதி பெற முடியாது.
கைத்தறி நெசவாளர்களின் ஒட்டுமொத்த நலத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்ற போது இந்த கடுமையான நோய்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கான பிரிமியத் தொகையும் உயரும் நிலை உருவானது.
எனவே குறைந்த பிரிமியத் தொகையில் இந்த நோய்களுக்கான காப்புறுதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு அந்த பொறுப்பு எல்ஐசி-யிடம் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி-யும் தீவிரமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது என்று அமைச்சர் இளங்கோவன் கூறினார்.