உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 3 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டம், நீதி அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 690 நீதிபதி பணி இடங்களில் 595 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர் நீதிமன்றங்களில் தற்போது உள்ள காலியிடங்களை உரிய காலத்திற்குள் நிரப்புவது குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவில் தீர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் குறிப்பிட்ட பரத்வாஜ், நீதிமன்றங்களை கணினிமயமாக்கவும் நீதித்துறைக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.