திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பெருவாரியான வெற்றி பெற்றதையடுத்து, மாணிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மாணிக் சர்க்கார், அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் ஆகியோருக்கு அம்மாநில ஆளுநர் தினேஷ் நந்தன் சஹாய பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சியும் 11 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றன.