புது டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், கேரளாவில் அண்மையில் நடந்த அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இது குறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், கேரளத்தில் மீண்டும் அமைதியை நிலை நாட்டுவது குறித்து அம்மாநில அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்றார்.
மாநிலங்களில் இது போன்ற சிக்கல்கள் நேரும்போது, அதில் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுவது மாநில அரசுகளின் அதிகார வரம்பில் தலையிடுவதைப் போன்றதாகும் என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்துக் கவலை தெரிவித்த பாட்டீல், அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.