மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறினார்.
ஒரிசாவில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி புவனேஷ்வரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, "எனக்குத் தெரிந்த வரை மக்களவைக்கு உரிய காலத்தில்தான் தேர்தல் நடக்கும். தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பில்லை" என்றார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்துமா என்று கேட்டதற்கு, "இந்த விடயம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி விட்டார்'' என்றார் ராகுல் காந்தி.
அடுத்த பொதுத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு வைக்குமா என்று கேட்டதற்கு, ''இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. இக்கேள்விக்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தான் பதிலளிக்க வேண்டும்'' என்றார் அவர்.