நாடாளுமன்றத்தில் இன்று பா.ஜ.க. உறுப்பினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.
இரு அவைகளிலும் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், கேரள மாநிலம் கண்ணூரில் தங்கள் கட்சித் தொண்டர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் அறிவிக்கை கொடுத்தனர்.
இதேபோல, டெல்லியில் தங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நடந்த விவாதத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றி வாக்குவாதத்தில் இறங்கினர். இரு அவைகளிலும் இதே நிலையே நீடித்தது.
மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து பா.ஜ.க வினருக்கு எதிராக வாக்குவாதத்தில் இறங்கியதால் கூச்சல் குழப்பம் நிலவியது.
சுமார் 25 நிமிட வாக்குவாதத்திற்குப் பிறகு அவையின் மையப் பகுதியில் குழுமிய பா.ஜ.க. உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து "இந்த விடயம் மிகவும் கவலைக்கு உரியது. நான் இதைக் கண்டிக்கிறேன்" என்று கூறிய சோம்நாத் சாட்டர்ஜி அவையை 50 நிமிடங்களுக்குத் தள்ளி வைத்தார்.
மாநிலங்களவை தள்ளி வைப்பு!
மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளின் உறுப்பினர்களும், பா.ஜ.க.விற்கு ஆதரவாக சிவ சேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
இருதரப்பினரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பத்திரிகை செய்திகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் காட்டியவாறு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அவையில் அமைதி காக்குமாறு மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை இருதரப்பினரும் கேட்காததால் அவையை 30 நிமிடங்கள் தள்ளி வைத்து அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான் உத்தரவிட்டார்.