புது டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக இடதுசாரி, பா.ஜ.க. உறுப்பினர்கள் இடையில் மோதல் வெடித்ததை அடுத்து மாநிலங்களவை தள்ளி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினர் சீதாராம் யச்சூரி கொண்டுவந்த தீர்மானத்தை வாசிக்குமாறு அவரை அவைத் துணைத் தலைவர் கே.ரஹ்மான் கான் அழைத்தார்.
அப்போது இடைமறித்து எழுந்த பா.ஜ.க. உறுப்பினர்கள், கேரள மாநிலம் கண்ணூரில் தங்கள் கட்சித் தொண்டர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதனால் அவையில் கூச்சல் குழுப்பம் ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளின் உறுப்பினர்களும், பா.ஜ.க.விற்கு ஆதரவாக சிவ சேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
இருதரப்பினரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பத்திரிகை செய்திகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் காட்டியவாறு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அவையில் அமைதி காக்குமாறு மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை இருதரப்பினரும் கேட்காததால் அவையை 30 நிமிடங்கள் தள்ளி வைத்து அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான் உத்தரவிட்டார்.