இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த அவசியமான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடந்துவந்த பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
டெல்லியில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "அணுசக்தி நிலையங்கள், அணு உலைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி இனிதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
மேலும், "முன்னதாக, தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சின் விவரங்களை யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும். அதற்கான கூட்டத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார் அவர்.
இதற்கிடையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், யு.பி.ஏ. - இடதுசாரி உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்ட தேதி நாளை முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தாங்கள் அவசரப்படவில்லை என்று தெரிவித்த காரத், தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவைப் படிக்கும் வரை அதுபற்றிக் கருத்துக் கூற முடியாது என்றார்.