பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஏவுகணை ஊழல் தொடர்பான வழக்கில் ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தாவை மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் (சி.பி.ஐ.) கைது செய்தனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்த போது, நமது கடற்படைக்காக இஸ்ரேலில் இருந்து 'பரேக்' என்ற ஏவுகணை வாங்கப்பட்டது.
ரூ.1,100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வணிகத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்ததால், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் அப்போதைய கடற்படைத் தளபதி சுஷில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய விவரங்கள் வெளிவந்தன.
இந்நிலையில், ஏவுகணை வாங்குவதற்கு தரகராகச் செயல்பட்ட ஆயுத வியாபாரிகள் சுரேஷ் நந்தா, அவரின் மகன் சஞ்சீவ் நந்தா ஆகியோரை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இவர்களுடைய கணக்கு விவரங்களை மறைத்ததாக வருமான வரி அதிகாரி அஸ்தோஷ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.