பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இந்த நிதிநிலை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர், அனைத்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவறை சேர்ந்த கிருஷ்ணா திராத், மோகினி கிரி, நபிஷா அலி ஆகியோர் துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு உட்பட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
"கோரிக்கை நிறைவேறுவதற்கான நல்ல அறிகுறி தெரிகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 20-ம் தேதி நடக்க உள்ளது" என்று மோகினி கிரி கூறினார்.
பெண்கள் இடஒதுக்கீட்டின்படி, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒருபங்கு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும். இந்த கோரிக்கை கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின பெண்களுக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
இந்தவாரத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது இடதுசாரி கட்சிகள், பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க., ஆகியவை பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐந்து ஆண்டு ஆட்சியின் முடிவில் இந்த அரசாங்கம் எந்தவிதமான சாதனையை காண விரும்புகிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்கப்பட்டதற்கு, 'தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் வெற்றி அடைந்திருக்க வேண்டும். இந்த திட்டம் வெற்றி அடைந்தால் பெண்களுக்கான சுகாதார சேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதனை சாதகமாக கொண்டு நாட்டு பெண்களுக்காக இந்த அரசு பலமாக ஏதாவது செய்யும்' என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா கேட் அமர் ஜவான் ஜோதியில் கூடிய பெண்கள் உலக அமைதிக்காகவும், சமூக ஒழுக்கத்திற்காகவும் பிரார்த்தனை நடத்தினர்.