இந்தியா- பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதிப் பேச்சு அடுத்த மாதம் மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலான நான்காவது சுற்று அமைதிப் பேச்சுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அமலுக்கு வந்ததால் அமைதிப் பேச்சு தடைபட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து சுமூகமான அரசியல் சூழல் உருவாகியுள்ள காரணத்தினால், அங்கு அமையவுள்ள புதிய அரசின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சு மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் பாகிஸ்தான் செல்ல உள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருதரப்பு அதிகாரிகளும் கலந்து பேசி, பேச்சிற்கான தேதியை முடிவு செய்வார்கள் என்றும், அநேகமாக அடுத்த மாதம் பேச்சு துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவை கூறின.
முன்னதாக, "பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்தவுடன் தடைபட்ட நான்காவது சுற்றுப் பேச்சுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்தாவது சுற்றுப் பேச்சுகளைத் துவங்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.