திரிபுரா மாநில ஆட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த மாநிலத்திற்கு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திரிபுரா சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 49 இடங்களைக் கைப்பற்றி ஆளும் இடது முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கிறது.
தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 46 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி. 2 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 10 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐ.என்.பி.டி. 1 இடத்திலும் வென்றுள்ளன.
தனது சொந்தத் தொகுதியான தான்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் 2,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்த முறையும் இவரின் தலைமையில் அரசு அமையும்.
கடந்த 1993 ஆம் ஆண்டில் திரிபுராவில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த இடது முன்னணி, தொடர்ந்து 1998, 2003 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
முன்பு இடது முன்னணியில் அங்கம் வகித்த ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தொகுதிப் பங்கீட்டில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.