சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கும் ஏழ்மையை ஒழிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே சிறந்த வழியாக இருக்கும் என்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :
நமது நாட்டை வளமையான நாடாக மாற்ற தொடர்ந்து உழைத்து வரும் ஒவ்வொரு சகோதரிக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் அன்றைய மகளிர். அன்று முதல் இன்று வரை சமூகத்தை வழிப்படுத்துவதில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தாங்கள் சார்ந்துள்ள துறையில் முத்திரை பதிக்கும் மகளிரும் அதிகமாக உள்ளனர். அவர்களால் பெண் சிசுக் கொலை, வரதட்சணை போன்ற சமூக கொடுமைகளை எதிர்த்து அழிக்கவும் முடியும். மேலும் சமூகத்தில் உள்ள அடித்தளத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க சாதனைப் பெண்கள் முன்வர வேண்டும். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கும் ஏழ்மையை ஒழிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே சிறந்த வழியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.