திரிபுரா சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 60 இடங்களுக்கு நடந்த தேர்தலில், இதுவரை முடிவுகள் வெளியாகியுள்ள 53 இடங்களில் 44 இடங்களைக் கைப்பற்றி ஆளும் இடது முன்னணி அரசு தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 41 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி. 2 இடங்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
முன்பு இடது முன்னணியில் அங்கம் வகித்த ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தொகுதிப் பங்கீட்டில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
இது தவிர, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 8 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐ.என்.பி.டி. 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இன்னும் முடிவுகள் வெளியாக வேண்டிய 7 இடங்களில் இடது முன்னணி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
தனது சொந்தத் தொகுதியான தான்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் 2,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மேகாலயாவில் இழுபறி!
மேகாலயா சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு கடந்த 3-ஆம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 89.05 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றியது.
இதரக் கட்சிகளும், சுயேட்சைகளும் மற்ற 10 இடங்களைக் கைப்பற்றினர். இதனால் மேகாலயாவில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மேகாலயா முதல்வர் டி.டி. லாபாங் நோங்போ தொகுதியில் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மேகாலயா அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பலத்தை பெற்றது இல்லை. அங்கு கடந்த 35 ஆண்டுகளில் அமைந்த 18 அரசுகளில் பெரும்பாலான அரசுகள் பதவிக்காலம் முடிவதற்குள் கவிழ்ந்து விட்டன.
மேகாலயாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. தேர்தல் முடிவுகளும் அப்படியே இருந்தன.