அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரி உயர் மட்டக் குழுக் கூட்டத்தை வருகிற 15 ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் முக்கியப் பங்காற்றும் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் எழுதியுள்ள கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா இன்று காலை டெல்லியில் பிரகாஷ் காரத்தைச் சந்தித்தார். அப்போது, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நிலை குறித்து மத்திய அரசு அண்மையில் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், அதுபற்றி விவாதிப்பதற்காக இக்கோரிக்கையை இடதுசாரிகள் முன் வைத்துள்ளனர் என்று கருதப்படுகிறது.
இரண்டு மாதத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த முயற்சியை எடுத்தாலும் மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்து நடக்கக் கூடிய ஐ.மு.கூ.- இடதுசாரி உயர் மட்டக் குழுக் கூட்டம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.