இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு அவசியமான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ) இந்தியா நடத்திவரும் பேச்சுகள் இறுதி நிலையை எட்டியுள்ளது.
தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா இதுவரை 5 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்துள்ளது.
இருதரப்பிற்கும் இடையில் கடந்த வாரம் வியன்னாவில் நடந்த 5வது சுற்றுப் பேச்சில் பல முக்கிய விடயங்களுக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் பேச்சாளர் அயன் எவ்ரென்சல், "தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டிவிட்டதாகவே நான் கருதுகிறேன்" என்றார்.
இதற்கிடையில், அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரிகள் உயர்மட்டக் குழு, தனித்த கண்காணிப்பு ஒப்பந்த வரைவின் தற்போதைய நிலை தொடர்பாக அடுத்த வாரம் கூடி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்ட தேதி தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இன்னும் வரவில்லை என்று இடதுசாரிகள் கூறினர்.