கர்நாடகத்தில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தற்போது வகிக்கும் மராட்டிய ஆளுநர் பதவியை விட்டு விலகுகிறார்.
மும்பையில் இருந்து டெல்லி சென்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா இன்று மாலை 6.45 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்துத் தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்கிறார். முன்னதாக அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிகள் அடுத்தடுத்துக் கவிழ்ந்ததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலுடன் கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதா? அல்லது தனியாக நடத்துவதா? என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டால் காங்கிரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் எஸ்.எம்.கிருஷ்ணாவை களத்தில் இறக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.