நாகலாந்தில் இன்று நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகலாந்து சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்களுக்கான வாக்குபதிவு நடந்தது. இத்தேர்தலில் நான்கு பெண்கள் உட்பட 218 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலத்தில் சுமார் 13 லட்சம் வாக்களார்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர்களான நிபியூ ரியோ (நாகலாந்து மக்கள் முன்னணி), கே.எல்.சிஷி (காங்கிரஸ்) ஆகியோருடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ஐ.இம்காங் போட்டியிடுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, நாகலாந்து மக்கள் முன்னணி, ஆர்.ஜே.சி, தேசியவாத காங்கிரஸ் உட்பட 10 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும், நாகலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கும் நேரடி மோதல் உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் சுயேச்சை மற்றும் சிறிய கட்சியை சேர்ந்தவர்கள் அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிகிறது.
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் நடைபெறும் தேர்தலில் 1,780 வாக்குச் சாவடிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர், உள்ளுர் காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.