சேதுக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இவ்வழக்கில் மத்திய அரசு செய்துள்ள பதில் மனுவில், சேதுக் கால்வாய் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை 6க்குப் பதிலாக மாற்றுப் பாதை தேர்வு செய்வது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.
சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியில் உள்ள நிலத்திட்டு ‘ராமர் பாலம்’ என்று உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அது குறித்து நிபுணர்கள் குழு அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி தனது நிலையை எடுத்துக் கூறியுள்ள மத்திய அரசு, அது இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே என்றும் கூறி, அப்பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணிக்கு எதிராக பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.
ராமர் பாலம் என்று அம்மணல் திட்டுக்கள் நம்பப்படுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு அறிவியல் அல்லது அறிவியல் ஆதாரங்களைக் காட்டியோ தீர்வு காண முடியாது என்று கூறியுள்ள மத்திய அரசு, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது அனைத்து மதங்களையும், மத நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அதே வேளையில் எந்த ஒரு மத்த்தின் நம்பிக்கையையும் ஒரு மதச் சார்ப்பற்ற அரசு தனது கொள்கையாக ஏற்க முடியாது” என்று கூறியுள்ளது.
“பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் கொண்ட சமூகத்தில் நம்பிக்கை தொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுமாறு அரசை அழைக்கக்கூடாது” என்று கூறியுள்ள மத்திய அரசு, “சர்ச்சைக்குறிய இப்பிரச்சனையில் நம்மிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றமே ஒரு தீர்வைத் தரவேண்டும்” என்று கூறியுள்ளது.