தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திரச் சட்டப் பேரவையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அவைத் தலைவரிடம் அளித்தனர்.
தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மக்களவையில் அக்கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அவைத் தலைவர் சோம்நாம் சாட்டர்ஜியிடம் அளித்தனர்.
இந்நிலையில், இன்று ஆந்திர சட்டப் பேரவையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அவைத் தலைவர் சுரேஷ் ரெட்டியிடம் அளித்தனர். இதேபோல 3 மேலவை உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அதற்கான குழுவிடம் அளித்தனர்.
மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரச் சட்டப் பேரவையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு 26 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 10 உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலக ஒப்புக்கொள்ளவில்லை.