மேகாலயாவில் இன்று நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேகாலயா சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு இன்று நடந்த வாக்குப் பதிவு மிகவும் அமைதியாக இருந்ததாகவும், குறிப்பிடத்தக்க வகையிலான வன்முறை நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் துணைத் தேர்தல் ஆணையர் ஆர்.பட்டாச்சார்யா தெரிவித்தார்.
"பக்மாரா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சங்மா திடீரென இறந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு மட்டும் மார்ச் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திரிபுராவைப் போலவே மேகாலயாவிலும் தேர்தல் ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 12 லட்சம் வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார்.
தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 1,599 வாக்குச் சாவடிகளில் 15,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 39 தேர்தல் பார்வையாளர்களும், 117 நீதிபதிகளும் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டனர்.