தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது மீண்டும் பேச்சு நடத்துவோம் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் இன்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கருத்துக் கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ.க. வின் நிலைபாட்டில் மாற்றமில்லை. அதன் தற்போதைய வடிவத்தை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியாகியுள்ள அறிவிப்புகளால் யாருக்கும் பயனில்லை, அது வெறும் கண் துடைப்பு என்று கூறிய ஜோஷி, "நாங்கள் நிதிநிலை அறிக்கையை எதிர்க்கிறோம். அதில் கூறப்பட்டுள்ள அறிவிப்புகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் நிதி எங்கிருந்து வரும் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை மத்திய அரசிற்கு உள்ளது" என்றார்.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்க்கும் வணிகர்களைத் தாங்கள் எதிர்ப்பதாகத் தெரிவித்த ஜோஷி, இன்னும் சில மாதங்களில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.