இலங்கை இனப் பிரச்சனைக்கு எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வே சாத்தியமானது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் இன்று அயலறவுக் கொள்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அங்கு மாறிவரும் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றார்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, தமிழர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வே சரியானதும் சாத்தியமானதும் ஆகும் என்பதே இந்தியாவின் நிலை என்று விளக்கினார்.
இதை மனதில் கொண்டுதான், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி சிறிலங்கா அரசு அண்மையில் வெளியிட்ட தீர்வை இந்தியா வரவேற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீனவர்கள் பிரச்சனை!
"இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு நமது மீனவர்களும் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.
இந்திய மீனவர்களைக் கைது செய்யும் விடயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் சிறிலங்கக் கடற்படையை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார் பிரணாப் முகர்ஜி.