சிறு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண மக்கள் நீதிமன்றங்களை (லோக்அதாலத்) மக்கள் அணுகவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக்பான் வேண்டுகோள் விடுத்தார்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாகன விபத்துக்களை விசாரிக்கும் மக்கள் நீதிமன்றங்களின் செயல்பாட்டைத் துவங்கி வைத்துப் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக்பான், "நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள 3 கோடி வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்ற முறையே சிறந்ததாகும்" என்றார்.
வழக்கு தொடர்புடையவர்கள் விசாரணையில் பங்கெடுத்தல், இரு தரப்பினருக்கு இடையே சமரசம் செய்தல், இணங்க வைத்தல், கோரிக்கைகளை எழுப்புதல் போன்றவற்றிற்கு மக்கள் நீதிமன்றத்தில் வழி உள்ளதால், வழக்குகள் நீண்டகாலம் இழுத்தடிக்கப்படுவதை தடுக்க முடியும் என்றார் அவர்.
மாலை நேரங்களில் செயல்படும் மக்கள் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அசோக்பான், மக்கள் அதிக அளவில் தங்கள் தாவாக்களுக்கு தீர்வுகாண உதவும் வகையில் சனி, ஞாயிறுகளில் நீதிபதிகள் நேரம் ஒதுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
நீதிபதிகளும், சட்டம் இயற்றுபவர்களும் அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கும் அனைத்து அடிப்படை உரிமைகள் குறித்து தெளிவுபடுத்துவதோடு, நாட்டின் குக்கிராமங்களில் வாழும் சாதாரண மக்களின் வாயிலுக்கே மக்கள் நீதிமன்றங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஊதியத்தில் 25 விழுக்காட்டை,அவர்களின் அடிப்படை ஊதியத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும் அசோக்பான் வலியுறுத்தினார். புதிய நீதித்துறைக் கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் தங்கள் வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண இந்த அமைப்பை நோக்கி விரைந்து முன்வருவார்கள் என்றும் நீதிபதி அசோக்பான் கூறினார்.