Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேதுக் கால்வாய்: மாற்றுப் பாதை சாத்தியமில்லை – மத்திய அரசு மனு!

சேதுக் கால்வாய்: மாற்றுப் பாதை சாத்தியமில்லை – மத்திய அரசு மனு!
, சனி, 1 மார்ச் 2008 (12:32 IST)
சேதுக் கால்வாய் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை 6க்குப் பதிலாக மாற்றுப் பாதை தேர்வு செய்வது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசின் சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியில் உள்ள நிலத்திட்டு ‘ராமர் பாலம்’ என்று உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அது குறித்து நிபுணர்கள் குழு அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி தனது நிலையை எடுத்துக் கூறியுள்ள மத்திய அரசு, அது இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே என்றும் கூறி, அப்பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணிக்கு எதிராக பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை செயலர் ஏ.பி.வி.என். சர்மா தாக்கல் செய்துள்ள இம்மனுவில், “சேதுக் கால்வாய் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை எண் 6, 1956ஆம் ஆண்டு முதல் அப்பகுதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகவும், எச்சரிக்கையாகவும் ஆய்வு செய்த பின்னரே தேர்வு செய்யப்பட்டதாகும” என்று கூறியுள்மத்திய அரசு, “அப்பகுதியின் சுற்றுச் சூழல், கப்பல் போக்குவரத்து, பொறியியல் மற்றும் கடல் எல்லை ஆகிய அனைத்து கூறுகளையும், அவற்றோடு அப்பகுதியின் மீன்வளம், மீனவர் நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட்டது” என்று கூறியுள்ளது.

சேதுக் கால்வாய் திட்டப்பகுதியிலுள்ளது ராமர் பாலம் தானா? என்பதை முடிவு செய்வதற்கு, தொல்லியல் துறை ரீதியான ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, “அப்படிப்பட்ட நம்பிக்கை குறித்து தேச, சர்வதேச விதிகள் வழிகாட்டுதல்கள் போன்ற நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுதான் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுவரை தொல்லியல் துறையின் சார்பாக அப்படிப்பட்ட ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில் அதன் முடிவை முன்கணிக்க முடியாத” என்றும் தனது மனுவில் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

பலத்த ஆலோசனைகளுக்குப் பிறகே இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்கின்ற முடிவை மத்திய அரசு எடுத்ததென்றும், கொள்கை ரீதியாக மாறுபாடுகள் கொண்ட பல்வேறு கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் 30,000 மீட்டர் நீளமுடைய அந்த மணல் திட்டுப் பகுதியில் சேதுக் கால்வாய் திட்டத்திற்காக வெறும் 300 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே கடல் ஆழப்படுத்துவதற்கான பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையின் காரணமாக அப்பகுதியல் ஆழப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ராமர் பாலம் என்று அம்மணல் திட்டுக்கள் நம்பப்படுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு அறிவியல் அல்லது அறிவியல் ஆதாரங்களைக் காட்டியோ தீர்வு காண முடியாது என்று கூறியுள்ள மத்திய அரசு, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது அனைத்து மதங்களையும், மத நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அதே வேளையில் எந்த ஒரு மத்த்தின் நம்பிக்கையையும் ஒரு மதச் சார்ப்பற்ற அரசு தனது கொள்கையாக ஏற்க முடியாது” என்று கூறியுள்ளது.

“பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் கொண்ட சமூகத்தில் நம்பிக்கை தொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுமாறு அரசை அழைக்கக்கூடாத” என்று கூறியுள்ள மத்திய அரசு, “சர்ச்சைக்குறிய இப்பிரச்சனையில் நம்மிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றமே ஒரு தீர்வைத் தரவேண்டும” என்று கூறியுள்ளது.

இவ்வழக்கு மார்ச் 5ஆம் தேதி விசாரணக்கு வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil